அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் கல்விக்கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக்கட்டணத்திற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியர்களின் சம்பளம், கல்லூரி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கல்விக்கட்டணத்தை உயர்த்த தமிழக உயர்கல்வித்துறையிடம், அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கட்டண உயர்வுக்கு தமிழக உயர்கல்வித்துறை முதலில் மறுப்பு தெரிவித்திருந்தநிலையில், கட்டண உயர்வை சற்று தளர்த்தி பின்னர் ஒப்புதல் அளித்தது.
கட்டண உயர்வு எவ்வளவு : பி,இ. படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக் படிப்புகளுக்கான கட்டணம் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கட்டணம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டிலிருந்தே ( 2019 -20) புதிய கல்விக்கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய கல்வி கட்டண உயர்வு, அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக்கல்லூரிகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.