கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. கடந்த 2012-ம் ஆண்டு இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
இந்நிலையில், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை முறையாக செலுத்தவில்லை என கடந்த 2019-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ரூ. 2 கோடியே 44 லட்சத்தை செலுத்தும்படி கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, செலுத்த வேண்டிய ரூ. 2 கோடியே 44 லட்சத்தில் 30 சதவீத தொகையை ஆறு வாரங்களில் டெபாசிட் செய்யும்படி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ. சத்யநாராயண பிரசாத், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவுப்படி, வருங்கால வைப்பு நிதி பாக்கியில் 30 சதவீதமான ரூ.73 லட்சத்து 23 ஆயிரத்தை செலுத்த பல்கலைக்கழகத்தில் போதிய நிதிநிலை இல்லை. தற்போதைய நிலையில் ரூ. 10 லட்சம் மட்டுமே செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், இந்த மனுவின் நகலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் ஆணையருக்கு வழங்க அண்ணா பல்கலைக்கழக தரப்புக்கு உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“