கடந்த மாதம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்ட சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நாளை முதல் பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வகுப்பு மற்றும் விடுதி நேரங்களில் மாற்றம் இல்லை. மாணவர்கள் கல்லூரியின் வளாகத்திற்குள் வரும்போது அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக்கூடிய தெரு விளக்குகள் அனைத்தும் ஒளிரும்படி செய்யவும் கூடுதல் மின்விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாணவர்களின் அறிவுறுத்தல் ஆலோசனை படி சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் எந்த சூழ்நிலையிலும் வேலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்க கூடாது. கட்டுமானத் தொழிலாளர்கள் ஏதேனும் வேலை செய்து முடித்துவிட்டு உடனே வெளியே செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
பின்னர் வளாகத்திற்குள் உணவு டெலிவரி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
சிசிடிவி கேமராக்கள் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடைய பாதுகாப்பிற்காக காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் வருபவர்களின் வாகன எண் செல்போன்கள் எண்கள் ஆகியவற்றையும் பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். வெளி நபர்கள் வளாகத்தில் உள்ளே வந்து செல்ல அனுமதி இல்லை.
இதை பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல பல்கலைக்கழக மற்ற பணியாளர்களும் இவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரவுண்ட்ஸ் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“