அண்ணா பல்கலையில் ஊழல் : விசாரணையில் சிக்கும் பேராசிரியர்கள்!

நீண்டகாலமாகவே நடைபெற்று வரும் முறைகேடு என்பதால் அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை.

Anna University scam : சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில்  அண்ணாபல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய ஊழல்  அரங்கேறி  இருப்பதாக  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த  2 நாட்களாக அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 Anna University scam: 

விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. ஆனால் அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் நவீன முறையில் ஏமாற்றி, மிக நூதனமாக இந்த முறைகேடு நடந்துள்ளது கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் ரூ.700 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அந்த 700 ரூபாயில் ரூ.300 விடைத்தாள் போட்டோ காப்பிக்கும் ரூ.400 மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யும் இடத்தில் தான் பேராசிரியர்கள் லஞ்சம் வாங்கியதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்கு பிறகே சுமார் 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதில் 90 ஆயிரம் பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் லஞ்சம் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி ஒரு செமஸ்டருக்கு ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றிருக்க வாய்யுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2017 கல்வி ஆண்டில் இந்த மோசடி நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன் தினம் (2.8.18) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன. அதன் பின்பு, முன்னாள் தோ்வுத்துறை அதிகாரியும், பல்கலைக்கழக பேராசிரியையுமான உமாவை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டது.

 

Anna University scam

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உமா

பேராசிரியர் உமா இடைநீக்கத்தை தொடர்ந்து, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து பேராசிரியர் விஜயகுமாரும் நீக்கப்படுவதாக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஓழிப்பு துறையினர் தொடர்ந்து நடத்திய சோதனையில் மேலும் 2 பேராசிரியர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரக்த்தில் மேலும் பல பேராசிரியர்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இதுத் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலை ஊழல் விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீட்டின் ஊழல் குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் “ அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நீண்டகாலமாகவே நடைபெற்று வரும் முறைகேடு என்பதால் அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை.

அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக தபால் வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்தும் விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close