அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்தது தொடர்பான வழக்கில், பத்திரிகையாளர்களின் செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதிகள் இருந்தபோதும் இது எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, இந்த அழைப்பாணையை பத்திரிக்கையாளர்களின் செல்லுபோனுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பி வருகிறது. இருந்தபோதும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிக்கையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.
அவ்வாறு விசாரணைக்கு செல்லும் பத்திரிக்கையாளர்களை சிறப்பு புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப் போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்கு சற்றும் பொருந்தாத கேள்விகளை கேட்பதாகவும் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கும் மேலாக, விசாரணைக்கு சென்ற சில பத்திரிக்கையாளர்களின் செல்போன் மற்றும் சில மின்னணு கருவிகளை பறிமுதல் செய்வது அவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளை முடக்குவதுடன், அவர்களை அச்சுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. மேலும், பணியின் நிமித்தமாக இத்தனை ஆண்டுகளாக அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் தொடர்புகளை முடக்கும் நடவடிக்கையாகும். காவல்துறை இத்தகைய நடவடிக்கை அப்பட்டமான கருத்துக் சுதந்திர ஒடுக்குமுறையாகும்.
ஆகவே, சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் பத்திரிக்கையாளர்களை துன்புறுத்துவது மற்றும் அச்சுறுத்துவதை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பத்திரிக்கையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் இதர கருவிகளை உடனே திரும்ப வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்." என்று தெரிவித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/2d09fd02-35d.jpg)
/indian-express-tamil/media/post_attachments/4054feab-1f9.jpg)