சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து, குற்றவாளி ஞானசேகரனை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழுவில் இருந்து இடம்பெற்றிருந்த மாநில சைபர் கிரைம் டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி, வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ள அவர், தன்னை சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாகத் தான் விசாரணைக் குழுவின் இருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். டி.எஸ்.பி. ரவியின் இந்த முடிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.