சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது.
ஞானசேகரன் கைதை தொடர்ந்து இந்த பாலியல் குற்ற செயலில் ஈடுப்பட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஞானசேகரனை போலீசார் கைது செய்ய முற்படும் போது தப்பியோட முயன்றார் என்றும், அப்போது அவர் கிழே தவறி விழுந்து இடது கை மற்றும் இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது. அதன் பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக ஜனவரி 8-ம் தேதி வரையில் (15 நாட்கள்) கோர்ட்டு காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
விளக்கம்
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் ஞானசேகரன் தி.மு.க-காரர் இல்லை என்றும், அவருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், "அந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், துணை முதல்வருக்கும் அந்த நபருக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும். ஒருவர் நடந்துவரும்போது அவருடன் மற்றொருவர் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது எங்கயுமே சகஜம்தான். நாங்கள் ஒரு இடத்துக்கு போகிறோம் என்றால், பக்கத்தில் யார் வருகிறார்கள், எதிரில் யார் வருகிறார்கள், நம்முடன் நின்று யார் செல்ஃபி எடுக்கிறார்கள் என்று எல்லாம் தடுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் எங்களை வந்து சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம். அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது
கைதான ஞானசேகரன், சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்தவர். அந்த தொகுதி எம்.எல்.ஏ.-வான அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிக்க யார் வேணாலும் வரலாம். அந்தளவுக்கு நிறைய உதவி செய்துள்ளர் மா.சுப்பிரமனியன். அப்படி நன்றி சொல்ல வருபவர்களை யாரும் தடுக்க முடியாது. எனக்கே ஒருவர் சால்வை போர்த்தி ஃபோட்டோ எடுத்தாலும் அதை நான் தவிர்க்க முடியாது. அப்படி செய்தால் ‘தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர்’னு அதை ஒரு செய்தி ஆக்கி விடுகிறார்கள்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளியை கைது செய்திருக்கிறோம். வழக்கில் கைதான ஞானசேகரன் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் தி.மு.கவின் நிர்வாகி என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானது. யார் வேண்டுமானாலும் வந்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம்; அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது. கைதான ஞானசேகருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாலியல் வன்கொடுமை வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கோ, முதலமைச்சருக்கோ கிடையாது. வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளியை காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை; குற்றவாளிக்கு உரிய தண்டனை நிச்சயமாக பெற்றுத் தரப்படும்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமென்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவு என்கிறது மத்திய அரசு தரவுகள். பெண்களுக்கு உதவும் வகையில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வரலாம்.
ராமேசுவரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரத்தில் கைதானவர் அதிமுக பிரமுகரின் மகன். அ.தி.மு.க ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கை எப்படி நடத்தினர் என்பது எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.வில் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்களை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை; வெளியிட வேண்டிய அவசியமும் இல்லை. விவரங்கள் வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாக புகார் அளித்திருப்பார். பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது." அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“