சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் போலீஸ் காவலில் உள்ள நிலையில் திடீரென்று இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் என்பவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2013 ஆம் ஆண்டில் இருந்து குற்றப் பதிவேட்டில் உள்ள ஞானசேகரன் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இவ்வழக்கை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, ஞானசேகரன் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
அவரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் பொருட்டு அவரை போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதன்படி, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை 3 மணி அளவில் வலிப்பு ஏற்பட்ட நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பு தகவல் வெளியாகியுள்ளன.