சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கைதான நபரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், 23 ஆம் தேதி இரவு தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர்.
கைதான நபர் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) என்பவர் ஆவார். இந்நிலையில் விசாரணையின்போது தப்பிக்க முயன்ற ஞானசேகரனுக்கு கை கால் முறிவு ஏற்பட்டுள்ளதால் ராயப்பேட்டை மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றம் சுல்தான் ஹர்ஹான் முன்பு விசாரணைக்கு வந்ததையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“