அடிப்படை உள் கட்டமைப்பு இல்லாத 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை அண்ணா பல்கலைகழகம் எடுத்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இயங்கி வரும் இஞ்ஜினியரிங் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அந்தந்த மாநில பல்கலைகழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற வேண்டும். இதில், தமிழகத்தைப் பொறுத்தவரை இஞ்ஜினியரிங் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெறவேண்டும்.
ஏஐசிடிஇ-யின் அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது அல்லது புதிதாகத் தொடங்கப்படும் இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக குழு ஆய்வில் ஈடுபடும். இந்த ஆய்வின்போது, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்கிறதா? ஆசிரியர் கல்வித் தகுதி, ஆய்வகம், கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை, இணையதள வசதி, வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம்.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும். இந்த வழிகாட்டுதலை முறையாக பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் குறைக்கப்படும். அல்லது அனுமதி முழுமையாக நிறுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 537 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக குழு நடத்திய ஆய்வில் உரிய விளக்கம் அளிக்கத் தவறிய 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 53 இளநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட 92 இஞ்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை இஞ்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக் கழக ஆய்வுக் குழுவின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.