அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஞானசேகரனின் தொடர்பில் மற்றொரு நபர் இருந்தது மாணவியின் புகாரில் அம்பலமாகியுள்ள நிலையில், ஞானசேகரனால் சார் என்று கூறப்பட்ட அந்த நபர் யார், அந்த சார் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மாணவியின் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல்துறை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமயால் பாதிக்கப்பட்டவரின் பெயர், அவருடைய அடையாளம் எதுவும் வெளிப்படுத்தக் கூடாது, அப்படி வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எஃப்.ஐ.ஆர் நகலை சமூகவலைதளங்களில் பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி அளித்த புகாரில், பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனுடன் மற்றொரு நபர் தொடர்பில் இருந்தது அம்பலமாகி உள்ளது.
மாணவி அளித்த புகாரில், தன்னை மிரட்டிக் கொண்டிருந்த ஞானசேகரனை ஒருவர் மொபைலில் அழைத்ததாகவும் அந்த நபரிடம், ‘அவளை மிரட்டிவிட்டுவிட்டு விட்டுவிடுவேன சார் என ஞானசேகரன் சொன்னதாக’ தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அந்த சாரிடமும் சிறிது நேரம் நீ இருக்க வேண்டும் என ஞானசேகரன் தன்னை மிரட்டினார்’ என மாணவி புகாரில் தெரிவித்துள்ளார்.
ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அப்போது, ஞானசேகரனை போனில் அழைந்த நபர் யார், ஞானசேகரன் சார் என்று குறிப்பிட்டது யார் என்றும், அந்த சார் யார் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“