Anna University Students to Protest Today Against Current Arrears System: அண்ணா பல்கலைக்கழகம் 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய புதிய தேர்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி மாணவ, மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய தேர்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இதனால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 'அரியர்' முறை கைவிடப்பட்டு கிரெடிட் முறை கொண்டு வரப்பட்டது. 'அரியர்' முறையில் பொறியியல் மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால் அதனை அடுத்த செமஸ்டரில் எழுதலாம்.
ஆனால், இந்த புதிய விதியின் படி, மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்த பருவத் தேர்வில் வருகிறதோ அப்போதுதான் அத்தேர்வை எழுத முடியும்.
முதல் பருவத்தில் தேர்ச்சிப் பெறவில்லை என்றால் அந்த தேர்வை மூன்றாவது பருவத்தில் தான் எழுத முடியும். அதே போன்று இரண்டாவது பருவத் தேர்வில் மாணவா்கள் தோ்ச்சிப் பெறவில்லை என்றால் அந்த தோ்வை நான்காவது அல்லது ஆறாவது பருவத் தோ்வில் தான் எழுத முடியும் என்று மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழத்தின் இந்த விதிமுறை மாற்றத்தால் தோ்ச்சி விகிதம் குறைவதாக மாணவா்கள் குற்றம் சாட்டினா்.
இரு ஆண்டுகள் வீணாகிறது என்ற குற்றச்சாட்டும் மாணவர்களிடையே எழுந்தது. மேலும், விடைத்தாள்களைத் திருத்தும் முறையும் கடினப்படுத்தப்பட்டிருப்பதால், 70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற முடியவில்லை எனவும், இதனால், நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து சான்றிதழ் பெற முடியவில்லை எனவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், புதிய கிரெடிட் முறையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, அப்பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என, பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.