/indian-express-tamil/media/media_files/2025/06/07/jxAfFzjOy7auJF7Fz7qX.jpg)
சிவில் இன்ஜினியரிங் (தமிழ் வழி): மாணவர் சேர்க்கையை உயர்த்த அண்ணா பல்கலை. திட்டம்!
அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் வழங்கப்படும் பிஇ சிவில் இன்ஜினியரிங் (தமிழ் வழி) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 2025-26 கல்வியாண்டு முதல் 30-லிருந்து 60ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக தமிழக அரசு 2010-ம் ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரியில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய 2 தமிழ் வழி பொறியியல் படிப்புகளைத் தொடங்கியது. இந்தப் தமிழ் வழிப் படிப்புகள், முதன்மையான வளாகங்களில் ஒன்றில் பொறியியல் படிக்கும் வாய்ப்பை வழங்குவதால், சிறந்த தரவரிசை பெற்ற மாணவர்களை ஈர்த்து வருகின்றன. தமிழ் வழிப் படிப்பிற்கான கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு சுமார் 186 ஆக இருந்தது.
"நாங்கள் எங்கள் சிவில் இன்ஜினியரிங் திட்டங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன் முதல்படியாக, இந்த ஆண்டு தமிழ் வழிப் படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கிறோம்," என்று சிஇஜி-யின் சிவில் இன்ஜினியரிங் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். கண்மணி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். மாணவர்கள் இந்தப் படிப்பை தமிழில் படிப்பார்கள் மற்றும் தேர்வுகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம்.
பேராசிரியர்கள் கூறியதாவது , தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் காரணமாக, பட்டதாரிகளில் பலர் பொதுப்பணித் துறையில் (PWD) வேலை பெற்றுள்ளனர். 6-ம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டைப் பெற முடியும் என்று நீதிமன்றத் தீர்ப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழ் வழியில் பொறியியல் படித்தாலே இந்த இட ஒதுக்கீட்டைப் பெற தகுதியானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டில், சிவில் இன்ஜினியரிங் ஆங்கில வழிப் படிப்பிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. "இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக் கழகங்களுடன் இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களைக் (twinning degree programmes) கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதன் பிறகு, சிவில் இன்ஜினியரிங் ஆங்கில வழி மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கப்படும்" என்று கண்மணி மேலும் கூறினார்.
சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கு அதிக தேவை இருப்பதால், அவற்றிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 12 ஆக உள்ளது. மேலும், 2025-26 கல்வியாண்டு முதல் 'பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை' (climate change and disaster management) என்ற புதிய எம்.டெக் படிப்பையும் தொடங்கவுள்ளது.
"இந்தப் புதிய படிப்பு, கிராமப்புறங்களிலும் பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கிடைப்பதை உறுதி செய்யும்," என்று அண்ணா பல்கலைக் கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் (CCCDM) நிறுவனர் மற்றும் மதிப்புறு பேராசிரியர் ராமச்சந்திரன் கூறினார். அனைத்துப் பொறியியல் துறை மாணவர்களையும் எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்து open elective வழங்கவும் சிவில் இன்ஜினியரிங் துறை திட்டமிட்டுள்ளது.
நன்றி: times of india
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.