துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

By: Updated: November 30, 2020, 09:14:28 PM

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்ககூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரனை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு நவம்பர் 11ம் தேதி அமைத்து உத்தரவிட்டது.

விசாரணைக்கு பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி கலையரசன், சூரப்பா மீதான புகார்களை நேரிலும் மின்னஞ்சலிலும் அளிக்கலாம் என்று கூறினார். விசாரணை ஆணையத்தில் துணை வேந்தர் சூரப்பா மீது மின்னஞ்சல் வழியாக புகார்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியானது.

துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்ததை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,
திருச்சி லால்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரு நபரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார்.

சூரப்பா மீதான இந்தப் புகார் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் நவம்பர் 11ம் தேதி உத்தரவிட்டார். துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை.

தமிழக அரசு இந்த புகார்கள் தெடர்பாக முதல் கட்ட விசாரணையையும் நடத்தவில்லை. துணை வேந்தரிடம் விளக்கமும் கேட்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிரான புகார் அளித்தவர் புகாரில், போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவருடையது. இப்படி இருக்க, புகார் அளித்த நபரைப் பற்றிய உண்மைத் தன்மையை ஆராயமல் தமிழக அரசு விசாரணை குழுவை அமைத்தது சட்டவிரோதமானது. அதனால், நீதிபதி கலையரசன் குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை குழு அமைத்து உத்தரவிட்ட உயர் கல்வித்துறை செயலரின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு பணம் வாங்கப்பட்டதாக புகார் வந்ததால், விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், இது போல புகார் கூறப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
நீதிபதிகளின் கேள்விக்கு அரசு வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழக விதிப்படியே விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இதையடுத்து, நிதிபதிகள் இந்த புகார் தொடர்பாக முதற் கட்ட விசாரணை நடத்தாமலேயே விசாரணை குழு அமைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், முதற்கட்ட விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள், தமிழகத்தில் அண்மைக் காலமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படவில்லை. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பிலும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. அது குறித்து விசாரிக்கவில்லை. புகார் கடிதம் வந்ததும், அதில் முகாந்திரம் உள்ளதா? இல்லையா? என பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்? சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? இதுபோன்ற ஊழல் புகார் கூறப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டால் என்ன? என கேள்வி எழுப்பினர். மேலும், துணை வேந்தர் சூரப்பா மீது முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகார் குறித்தும் அந்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களையும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Anna university vice chancellor mk surappa case chennai high court questions

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X