சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் தற்போது பள்ளி கல்லூரிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகள் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனயில் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊடகங்களிடம் கூறுகையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கூடுதலாக விடுதி வளாகத்தில் உள்ள 200 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"