சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும் அதிமுக, பாஜக, விஜய்யின் த.வெ.க உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மாணவிக்கு நீதி கேட்டு அ.தி.மு.க தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு நேற்று முதல் விசாரணையைத் தொடங்கினர்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சிக் உள்ளிட்ட 2 பேர் குழு அண்ணா பல்கலைக் கழகத்தில் விசாரணை மேற்கொண்னடர். நேற்று காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இன்றும் (டிச.31) விசாரணை நடத்தினர். இதையடுத்து குழு டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி நிர்வாகிகள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகள் உட்பட பலருடன் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்போம். ஏற்கனவே குற்ற வழக்கு உடைய நபரை இயல்பாக பல்கலைக் கழகத்தில் எப்படி நடமாட அனுமதித்தார்கள். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று கூறினார்.