விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், மற்றுமொரு திராவிட கட்சி போன்று இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை, லண்டனில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்து விட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் தமிழகம் திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில் "மூன்று மாதங்களில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. நடிகர் விஜய் திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போது, அரசியலில் கால் பதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்.
அன்று சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன். விஜய்யின் வருகையை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் அவர் வந்திருக்கிறார். முதல் மாநாட்டில் விஜய் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அதில் எதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ, அதற்கெல்லாம் பா.ஜ.க தலைவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள்.
மாநாட்டிற்கு பிறகு விஜய் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். விஜய் தனது கருத்துகளை தீவிரமாக எடுத்துரைக்கும் போது, நாங்களும் எங்கள் கருத்துகளை மக்கள் முன்னிலையில் கருத்துகளைவைப்போம். விஜய்யின் வருகை மக்களுக்கு மேலும் ஒரு சாய்ஸாக அமைந்துள்ளது.
அடுத்த ஓராண்டு காலம் எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிக்க போகிறார்கள். திராவிட கட்சிகள் பேசும் அதே சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். புதிதாக எதுவும் இல்லை. எங்கள் பாதங்கள் வலிமையாக தாங்கி நிற்கிறது.
விஜய்யின் பேச்சு, கொள்கைகள் அனைத்தும் கிட்டத்தட்ட திராவிட கட்சிகளோடு தான் ஒத்துப் போகிறது.
இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை பொதுமக்கள் எல்லோரும் கணித்து விட்டனர். புதிதாக வரும் நபர்களை கண்டு பா.ஜ.க பயப்படாது. வரவேற்கும் போது எல்லோருக்கு புதியதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எல்லோர் இல்லத்திலும் விஜய் ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதனை மறுக்க முடியாது. இந்திய அளவில் ஒரு படத்திற்கு அதிக வசூல் ஈட்டக் கூடிய நடிகராகவும் விஜய் இருக்கிறார். இதில் மாற்றுக் கருத்து இல்லை. 25 ஆண்டுகளாக விஜய் தன்னை வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், அரசியல் களம் வேறு.
மாநாடுக்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியே வந்திருக்கிறார்? நாள் முழுவதும் அரசியலில் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். வெற்றி, தோல்விகள் சாதாரணமாக வந்து கொண்டே இருக்கும். இதில் விஜய் தன்னை எப்படி தயார் படுத்தி வெற்றிபெறுவார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
ஆனால், எங்களுக்கு யார் மீதும் பயம் இல்லை. இன்றைக்கு திராவிட கட்சிகள் மூன்றாக பிரிந்திருப்பதாக நான் பார்க்கிறேன். திராவிட கட்சிகளுக்கு இருக்கக் கூடிய வாக்கு மூன்றாக பிரிந்துள்ளது. பா.ஜ.கவின் தேசிய வாக்கு அதிகமாகி வருகிறது. விஜய்யை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம்.
உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கட்சிக்குள் அவருக்கு வேகமான வளர்ச்சி இருக்கிறது. தி.மு.க ஒரு குடும்பத்தை சார்ந்து இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கிறது. வெளியே இருந்து திறமையானவர்கள் வருவது குறைந்து விட்டது.
துணை முதல்வராக உதயநிதியின் செயல்பாடுகளை எங்கு விமர்சிக்க வேண்டுமோ அங்கு விமர்சிப்போம்; நன்றாக செயல்பட்டால் நிச்சயம் பாராட்டுவோம்" எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“