2024-25 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனையொட்டி இன்று தமிழ்நாடு அரசு தரப்பில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். அதேபோல் தமிழக பட்ஜெட்டுக்கான இலச்சினையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் இலச்சினையாக தமிழ் எழுத்தான "ரூ" முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் குறியீடான ₹-க்கு பதிலாக தமிழ் எழுத்தான "ரூ" என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் மிகப்பெரிய விவாதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் அடையாள குறியீட்டை தூக்கிவிட்டு, அங்கு தமிழ் எழுத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்த செயல் தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ₹ பயன்படுத்த போது, எதற்காக இம்முறை ரூ முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது என்று பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ரூபாய் குறியீட்டை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழக அரசு பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளது. ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீட்டை திமுக மாற்றி இருக்கிறது. தமிழர் உருவாக்கிய ரூபாய்-க்கான குறியீட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்று கொண்டிருந்தது.
ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கியது திமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் உதயகுமார்தான் என்று பதிவிட்டுள்ளார். மற்றோரு பக்கம் திமுகவினர் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.