Advertisment

அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள் வீட்டில் சோதனை: எ.வ வேலு மீதான ரெய்டு பற்றி அண்ணாமலை

தி.மு.க-வை பொருத்தவரை, 30 மாதங்களில் 511 வாக்குறுதிகளில் என்ன செய்திருக்கிறீர்கள், என்று தான் மக்கள் கேட்கப் போகின்றனர். என்ன கேள்வி கேட்டாலும், முதல்வரிடம் அதற்கான பதில் சரியாக இருக்காது- அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Annamalai bjp.jpg

திருச்சி, கரூர் மாவட்டங்களில்'என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்ள பா.ஜ.க  மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் இன்று (நவ.4) திருச்சி வந்தார்.  

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அரசு சார்பாக மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். 

மலையக தமிழ் மக்களின் நாம் 200 என்ற நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார். ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் அதிகமான சகோதர சகோதரிகள் 1823-ல் முதல் முதலாக கப்பல் மார்க்கமாக, இலங்கை சென்றனர். அவர்கள் உருவாக்கியதுதான் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அவர்கள் வந்ததை, இலங்கை அரசு நாம் 200 என்ற நிகழ்வாக நடத்தி பாராட்டு தெரிவித்தது. 

ஏற்கனவே, 3 பேஸ்களில் மலையகப் பகுதியில் 4,000 வீடுகள் கட்டிக் கொண்டுக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு பகுதியில் ஏற்கனவே, 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை அதிபரோடு இணைந்து, 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை நட்டார். தொண்டைமான் செக்டார் ஒக்கேஷனல் பயிற்சி திட்டத்தில், மலையக மக்களின் குழந்தைகளின் கம்ப்யூட்டர் திறனை, வளர்ப்பதற்கான பயிற்சியையும் துவக்கி வைத்தார். 

மலையக பகுதியில் 10 பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள், பைகள், குடிநீர் வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில், கடந்த மூன்று மாதங்களாக, பொருளாதாரத்தின் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு போன்றவை இன்றி, இயல்புநிலை திரும்பி உள்ளது.   

இன்றைய கஷ்டமான சூழ்நிலையில், 3 பில்லியன் டாலர் இந்திய அரசு, இலங்கைக்கு பொருட்கள் அனுப்பி வைத்ததன் மூலமாக உதவி இருக்கிறது. இந்தியா உதவி செய்யாமல் இருந்திருந்தால், இலங்கை இந்த அளவுக்கு இருந்திருக்குமா? என்பது சந்தேகம் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரசிங்கே தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, நிதி அமைச்சர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நிச்சயமாக இலங்கை மீண்டு வருகிறது.

மலையக பகுதி மக்கள் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டுள்ளனர். நில உரிமை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த நம் மக்களுக்கு ஒருவருக்கு 6 சென்ட் நிலம் வீதம் வழங்கப்படும் என்பது போல், அந்நாட்டு அதிபர் உறுதியளித்துள்ளார். வரவேற்க வேண்டிய விஷயம். 

சமீபத்தில், இலங்கை அரசு, மலைய தமிழ் மக்களை ஸ்ரீலங்கன் தமிழர் என்று மாற்ற முயற்சி எடுத்த போது, அங்கிருந்தவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்பதால், மலையக தமிழர்கள் என்று தான் இருக்க வேண்டும், என்று குரல் கொடுத்தனர். அங்கிருக்கும் தமிழர்கள், இந்தியாவோடு தம்மை தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்கின்றனர். அதற்கும் இலங்கை அரசு செவி சாய்த்திருக்கிறது. 

அமைச்சர் எ.வ வேலுவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். நான் ஏதாவது சொன்னால், அப்புறம் அண்ணாமலை சொல்லித் தான் ரெய்டு வந்ததாக சொல்வார்கள். பவர்புல் துறை அமைச்சரான அவருக்கு எப்போதோ ரெய்டு வந்திருக்க வேண்டும். முதல்வர் அடுத்தடுத்து அவரது மருத்துவக் கல்லுாரிகளை திறந்து வைத்து வருகிறார். இன்றைக்கு, அதிகாரிகளுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் சோதனை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் எங்கேயும் இல்லாத அளவுக்கு எந்த ஒரு ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.  ஜெகத்ரட்சகன் மீது ரெய்டு நடத்தி, 1250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு என்று சொன்ன பின், சில வாரங்களில் வேலு மீது ரெய்டு நடக்கிறது.

எனவே, எந்த அளவுக்கு தமிழக அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்கள் குவிக்கின்றனர் என்பது தான் காரணம். அரசியலுக்கு வருவதற்கு முன், அமைச்சர் வேலுவின் பின்னணி என்ன? அதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. பத்திரிகையாளர்களுக்கு தெரியும் மருத்துவக் கல்லூரி எங்கிருந்து வந்தது.  

டவுன்ஷிப் போல் கட்டி வைத்துள்ள அதை முதல்வரே திறந்து வைக்கிறார். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எந்த (ஸ்கில்) திறனும் இல்லாமல், அரசியல்வாதி என்ற திறனை மட்டும் வைத்துக் கொண்டு, தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்கின்றனர்.  

தமிழகத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள் வீட்டில் சோதனை நடத்தினால், என்ன தவறு.  அவர்கள் தவறு செய்திருக்கின்றனர்; அதனால் ரெய்டு நடத்துகின்றனர். எவ்வளவு தொகை கணக்கிடப்படுகிறதோ அதற்கானதை சட்டப்படி எதிர் கொள்ள வேண்டும். 

இலங்கையின் வடகிழக்கு பகுதியில், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்து, நீதிமன்ற உத்தரவிட்ட பின், அரசு தரப்பில், உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். அதை எதிர்க்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.   

இந்திய துாதரகம் தரப்பில், 120-க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. சட்ட வல்லுனர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மீனவர்களை பற்றி, இலங்கை அரசிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளனர்.  

கடற்படை ரோந்துப் பணி பற்றியும் கட்சி சார்பில், வேண்டுகோள் வைத்துள்ளேன். தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்படுகிறது. விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

இலங்கை அரசு தரப்பில், 2017– 18-ல் கடல் படையினரால் கைப்பற்றப்படும் படகுகளை அரசுடமையாக்குவதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், இலங்கை அரசால் விதிக்கப்பட்ட அபராதத்தை தவிர்ப்பதற்காக, துாதரகம் தரப்பில் முறையீடு செய்து தவிர்த்து இருக்கிறோம். அதே போல், மாலத்தீவு அரசிடம் முறையீடு செய்து, அபராதம் செலுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் செய்ததை மக்களிடம் சொல்லித் தான், அடுத்த தேர்தலுக்கு ஓட்டு கேட்க முடியும். ஆட்சி அதிகாரம் இல்லாமல் ஆட்சிக்கு வருவது வேறு. ஆட்சியில் இருந்து மறுபடியும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது வேறு. தி.மு.க-வை பொருத்தவரை, 30 மாதங்களில் 511 வாக்குறுதிகளில் என்ன செய்திருக்கிறீர்கள், என்று தான் மக்கள் கேட்கப் போகின்றனர். என்ன கேள்வி கேட்டாலும், முதல்வரிடம் அதற்கான பதில் சரியாக இருக்காது. 

தமிழகத்தில் பா.ஜ., கட்சியினர் மற்ற கட்சிக் கொடிக்கம்பங்கள் இருக்கும் இடத்தில் கொடி ஏற்றினாலும், பட்டா நிலத்தில் கம்பம் வைத்து கொடி ஏற்றினாலும் கைது செய்கின்றனர். பா.ஜ., தொண்டர்களுக்கு உத்வேகம் கொடுப்பதால், மாநில தலைவராக இதை ஒரு விதத்தில் ரசிக்கிறேன். திருநெல்வேலியில் ஜாதியின் பெயரால் நடந்துள்ள கொடுமைகள் பற்றி தி.மு.க., பேசாது. பா.ஜ., கட்சியை பார்த்து பயப்படுவதால், சட்டத்துக்கு புறம்பாக அதிகாரிகளை துாண்டி, கைது செய்ய வைக்கின்றனர். ஜனநாயக அரசியல் கட்சியில் எல்லோரும் இருக்க வேண்டும். கட்சி பொறுப்பில் இருந்த சூர்யசிவா, விசாரணைக்குழு அறிக்கை அடிப்படையில் ஆறு மாதம் வெளியில் இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, 11 மாதங்களுக்கு பின், கட்சியில் இணைந்துள்ளார். அவர் எந்த பொறுப்பில் இருந்து விடுபட்டாரோ, அந்த பொறுப்பில் நேற்று மதியம் முதல் இணைந்து, பணியை துவங்கி உள்ளார்.

தி.மு.க., அரசு தொழில் முனைவோர்களுக்கு எதிராக இருப்பதால், பா.ஜ., சார்பில், ‘ஸ்டார்ட் அப் செல்’ உருவாக்கி உள்ளோம். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில், ஆனந்தன் அய்யாசாமி, மாநில கன்வீனர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். கருத்து வேறுபாடுகளை கலைந்து, எல்லோரையும் ஒருங்கிணைந்து முன்னெடுத்து செல்வது தான் தலைவரின் பொறுப்பு. பா.ஜ., கட்சியை பொறுத்தவரை அகண்ட பார்வை கொண்டது. நேரம் வரும்போது, தேசிய தலைவர்கள் தேர்தல் கூட்டணி பற்றி பேசுவார்கள் எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் திருச்சி பகுதியில் உள்ள இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் முகாமில் உள்ளவர்கள் பாஜக தலைமையகத்திற்கு மலையக மக்களாகிய தங்களின் பிரச்சனைகளை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனவும், ரேஷன் கார்டு இருந்தும் அகதிகளாக இருக்கின்றோம் என்ற வேதனையை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் ஜெயகர்ண்ணா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment