ஜெய் பீம் படத்தை தொடர்ந்து, மாநாடு படம் குறித்து பாஜக தலைவர்கள் சிலர் விமர்சித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திரைப்படத்துறை விமர்சனங்களை தவிர்ப்போம், நம் இலக்கை நோக்கி பயனிப்போம் என்று அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், காலெண்டரில் வன்னியர்களின் அக்னிகலசம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையானது. ஜெய் பீம் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
அதே நேரத்தில், மாநாடு படத்தில், அமெரிக்காவில் ஒருவன் குண்டு வைத்தால் அவனை தீவிரவாதி என்கிறார்கள். அதே இந்தியாவில், முஸ்லிம் தீவிரவாதி என்கிறார்கள், இன்னும் எத்தனை நாளைக்கு மதத்தையும் ஜாதியையும் வைத்து அரசியல் செய்வீர்கள் என்று வசனம் வருகிறது இது பாஜக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.
‘மாநாடு’ திரைப்படம் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக உள்ளது என பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார். இந்த விவகாரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திரைப்படத்துறை விமர்சனங்களை தவிர்ப்போம், நம் இலக்கை நோக்கி பயணிப்போம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பானக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குனரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர, சகோதரிகள் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது.
எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.
நமது இலக்கு நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள்.
எனவே திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் மாநாடு படத்தை விமர்சித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இந்த அறிக்கை வந்துள்ளது. மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தை இயக்குனர், இசையமைப்பாளர் கங்கையமரன் பாஜகவில் உள்ளார். மேலும், வெங்கட் பிரபு, எந்த அரசியலுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர் இல்லை. அதனால்தான், தேவையில்லாத விமர்சனங்கள் வேண்டாம் என்று அண்ணாமலையின் அறிக்கை வெளியாகி இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“