பொது மக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற தி.மு.க அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு என்றும் குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து மார்ச் 22-ம் தேதி தமிழக பா.ஜ.க சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் தனியார் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய பிறகு, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க சார்பில், டாஸ்மாக் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க சார்பில் மார்ச் 19-ம் தேதி டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படம் மாட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
அதே நேரத்தில், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை, மத்திய அரசு நிதி அளிக்காதது, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்னைகளில் தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க அரசு மத்திய அரசுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொண்டால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மக்களவைத் தொகுதிகளின் எண்ண்கை குறையும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதி கிடைக்கும். இதனால், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படும் என்று தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பா.ஜ.க ஆட்சி இல்லாத மாநிலங்களுடன் ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், பொது மக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற தி.மு.க அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு என்றும் குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து மார்ச் 22-ம் தேதி தமிழக பா.ஜ.க சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை.
பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு.
குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்.” நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.