பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி மாலை படுகொலை செய்யப்பட்டார். வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்த அவரை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியமாக வெட்டிக் கொன்றனர்.
இந்தப் படுகொலையில் தொடர்புடையதாக சிலர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கொலையில் சரணடைந்த திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் இன்று (ஜூலை 14, 2024) சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய போது சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சரணடைந்தவரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தி.மு.க.வினருக்கு தொடர்பு உள்ளது.
போலீஸ் காவலில் இருந்தவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்திருக்கும்? சரணடைந்தவரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவசர அவசரமாக என்கவுன்ட்டர் என்ற பெயரில் ஓர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“