சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டு உள்ளார். எல்லா தவறுகளையும் செய்துவிட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இன்னும் இந்த தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவசரச் சட்டமும் காலாவதியானது.
இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளும் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தாமல் 8 உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று சாடியுள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு தமிழக அரசு அரசாணை பிறப்பிக்காததால் தான் சட்டமே நடைமுறைக்கு வராமல் போனது என்று பா.ஜ.க ட்தலைவர் அண்ணாமலை தமிழக அரசை விமர்சித்துள்ளார். மேலும், எல்லா தவறுகளையும் செய்து விட்டு கவர்னர் மீது பழி போட்டு தி.மு.க. தப்பிக்க பார்க்கிறது என்றும் சாடியுள்ளார்.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வியாழக்கிழமை ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
அமைச்சர் ரகுபதி கருத்து குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறியிருப்பதாவது: “சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக்கொண்டு உள்ளார்.
அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன்? என்று ஏற்கனவே கேட்டிருந்தேன். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களை பரப்பி கவர்னரின் மேல் பழியை போட்டு வந்த தி.மு.க.வினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
ஆளும் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தாமல் 8 உயிர்கள் பலியானதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“