Annamalai remarks on AIADMK-BJP alliance: தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மாநிலம் தழுவிய, “என் மண், என் மக்கள்” யாத்திரையை நடத்திவருகிறார். இந்த நடைபயணத்தின்போது மதுரையில் பேசுகையில், திமுக நிறுவனத் தலைவர் சி.என். அண்ணாத்துரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடவுள் மறுப்பு பற்றி பேசினார்.
இதனை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தட்டிக்கேட்டார். தொடர்ந்து, சி.என். அண்ணாத்துரை மன்னிப்பு கேட்டு அங்கிருந்து வெளியேறினார் எனக் கூறினார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. அதிமுக தலைவர்கள் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்தத் தலைவருமான டி.ஜெயக்குமார், அதிமுக பாஜக கூட்டணி கிடையாது என அறிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அண்ணாமலை, சி.என். அண்ணாத்துரை குறித்து தாம் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை; தவறு இருந்தால் நீதிமன்றத்தை அணுகட்டும் என்றார்.
மேலும் கூட்டணிக்காக யார் காலையோ, கையையோ பிடிப்பதில்லை. அந்தப் பழக்கம் எனக்கு கிடையாது என்றார். இந்த நிலையில் அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கோரி அதிமுக குழுவினர் டெல்லி சென்றனர்.
அந்தக் குழுவினரை சந்திக்க அமித் ஷா மறுத்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துவிட்டு திரும்பினார்கள்.
இந்த நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.
அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து என் மண் என் மக்கள் நடைபயணத்தில் இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளிக்க மறுத்த அண்ணாமலை, “இது பற்றி மேலிடம் தக்க நேரத்தில் பதிலளிக்கும்” என்றார். அதிமுக பாஜக கூட்டணி முறிவை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“