துருப்பிடித்த இரும்புக்கை; தன்னைத்தானே புகழ்ந்து ஷூட்டிங்; ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா?: இ.பி.எஸ், அண்ணாமலை கண்டனம்

"துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai BJP EPS condemns CM MK Stalin Mayiladuthurai doubel murder Tamil News

"தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது. 

தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

இ.பி.ஸ் கண்டனம்  

தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை இரட்டை கொலை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்," மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட  இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் Unsafe Model அரசை நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின். தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை. 

ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தனக்குதானே புகழ்ந்து கொள்ளும் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. வழக்கை விசாரிப்பதற்கு முன்னமே காவல்துறையே தீர்ப்பை எழுதுவது தான் ஸ்டாலின் மாடலா?

இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை , மக்கள் பணியில்  சிறிதாவது செலுத்துமாறு ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். 

Bjp Cm Mk Stalin Annamalai Murder Mayiladudurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: