Annamalai | Udhayanidhi Stalin | Tamil Nadu: சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. 'டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்' என அவர் பேசிய நிலையில், அது இந்திய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. உதயநிதியின் பேச்சுக்கு பேச்சுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுக்க பா.ஜ.க.-வினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். அதோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என 262 பேர் கடிதம் எழுதினர். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என மீண்டும் தனது கருத்தை உறுதிபட கூறி வருகிறார் அமைச்சர் உதயநிதி. இதனால், பல்வேறு வழக்குகள் , எதிர்ப்புகள் அமைச்சர் உதயநிதி மீது வந்து கொண்டு இருக்கிறது. சனாதனம் சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மம் என்பதற்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "திருப்பாணாழ்வார் கோயிலுக்கு சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். ஏன் இப்படி விலகி இருக்கிறது? ஒரு கீழ் சாதியை சேர்ந்த மனிதர் சிவனை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரது சாதியை காரணம் காட்டி அவருக்கு அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த சிவனின் நந்தி (காளை), தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகி சென்று உட்கார்ந்து கொண்டு, அந்த மனிதர் சிவனை பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தர்மம்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“