சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்ட நிலையில், ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்றிரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் நடத்தப்பட்டு இன்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை காட்டம்
இந்த நிலையில், "ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில், "சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள், அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார். தி.மு.க நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் திரு. அப்பாவு.
பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?" என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.