தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வாக்கு வங்கியை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும் என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இந்துத்துவா சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதால் ஏற்பட்ட வெற்றிடத்தை தனது கட்சி நிரப்ப அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்துத்துவா தலைவரான, அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தமிழக அரசியலில் பா.ஜ.க நிரப்புகிறது என்றும் கூறி இருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க-வின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவை (Jeyalalitha) இந்துத்துவாவாதி என கூறுவதில் என்ன தவறு என்றும், இந்துத்துவா குறித்து அ.தி.மு.க-வுடன் (AIADMK) விவாதிக்க தயாராக உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் நடந்த பா.ஜ.க தலைவர் அண்னாமலை பேசுகையில், "ஜெயலலிதா ஒரு இந்துத்துவாவாதி, இந்துத்துவா என்பது மதம் அல்ல வாழ்வியல் முறை. அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் இந்துத்துவா. என் இந்துத்துவா அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். கரசேவை தவறான இயக்கம் அல்ல என பேசியவர் ஜெயலலிதா. ராமர் கோவில் கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தியவர் ஜெயலலிதா. தமிழகத்தில் வேதபாடசாலையை ஜெயலலிதா உருவாக்கினார்.
ஜெயலலிதா இருந்திருந்தால், முதல் ஆளாக ராமர் கோவிலுக்கு சென்றிருப்பார். மீண்டும் சொல்கிறேன் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. ஜெயலலிதா இந்துத்துவாவாதி என்பது குறித்து விவாதிக்க நான் தயார்; யார் வேண்டுமானாலும் விவாதிக்க வரலாம். ஜெயலலிதாவை இந்துத்துவாவாதி என கூறுவது என்ன தவறு. ஒரு விவாதம், விவாதமாக இருக்க வேண்டும். இந்துத்துவா குறித்து அதிமுகவுடன் விவாதிக்க தயார்." என்று அவர் அவர் கூறினார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.
2019 தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார். பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர்.. ஆனால் மோடியை திட்டுவதை மட்டுமே பிரகாஷ்ராஜ் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். பாஜகவை பற்றி பேசுவதற்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர்தான் நடிகர் பிரகாஷ் ராஜ்.
பிரதமர் மோடி பேசுவதை எதிர்க்கட்சியினர் திரித்து பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமையை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. விமர்சனம் செய்வது தவறில்லை; வார்த்தையில் கவனம் தேவை. விசிக தலைவர் திருமாவளவன் பொறுப்புணர்வோடு பேச வேண்டும்.
எல்லா இஸ்லாமியர்களும் ஓபிசி என்பதை தான் எதிர்க்கிறோம். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நான் மாட்டை சாமியாக பார்க்கிறவன். நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்; அதை என்னை சமைத்து கொடுக்க சொல்வது என்ன நியாயம்." என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த ஹிந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? pic.twitter.com/Jn2XvEpPG1
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 27, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.