“தி.மு.க பண பலத்தில் நம்பிக்கை வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. பணத்தால் எதையும் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தி.மு.க அமைச்சர்கள் பேசும் வீடியோ ஒன்றை ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோவில், தி.மு.க அமைச்சர் கே.என் நேருவுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் இடையே நடந்த உரையாடல் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு (கிழக்கு) தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி முடிவடைகிறது.
தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க அமைச்சர் கே.என். நேருவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி விவாதித்ததாக வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ குறித்து அண்ணாமலை ட்விட்டரில் குறிப்பிடுகையில், “தி.மு.க என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி; பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், பின்னணியில் நடந்த உரையாடலின் ஆடியோவை பதிவு செய்யப்பட்டிருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. அமைச்சர் கே.என். நேருவும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து விவாதித்ததாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், தி.மு.க அமைச்சர் பணம் வழங்குவது குறித்து, 'பிளாட்டினம் மஹால்' என்ற இடத்தில் சந்திப்பது குறித்தும், அதை ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் பேசுவது வீடியோவில் கேட்க முடிகிறது என்று கூறுகிறார்.
இந்த வீடியோ குறித்து அமைச்சர் எ.வ. வேலு சித்தரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதற்கு அண்ணாமலை, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று கூறினால், ஒரிஜினல் வீடியோ வெளியிடப்படும் என்று கூறினார். மேலும், இந்த வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.