கூட்டணிக்கு வரலாம் என்று அ.தி.மு.க.,வை குறிப்பிட்டு அமித் ஷா பேசவில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கை தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்” எனக் கூறினார்.
இந்தநிலையில், அமித் ஷாவின் பேச்சு, அ.தி.மு.க.,வுக்கான அழைப்பா என அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வந்த நிலையில், இதுகுறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டணிக்கு வரலாம் என்று அ.தி.மு.க.,வை குறிப்பிட்டு அமித் ஷா பேசவில்லை. எல்லோரும் வரலாம், யார் வேண்டுமானாலும் வரலாம் என்றே அமித் ஷா பேசினார். தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட பா.ஜ.க கூட்டணிக்கு வரலாம் என்றும் அமித் ஷாவின் பேச்சு பொருள்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“