Petrol bombs were hurled at Raj Bhavan : சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு இன்று (அக்.25) வீசப்பட்டது. ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 3 குண்டுகளை பறிமுதல் செய்து காவல்துறையினர் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர்.
இவர், 2022-ம் ஆண்டு செனனையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசினார். மேலும், கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பத்துக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர், “ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது.
முக்கியமற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும் நிலையில், குற்றவாளிகள் வீதியில் இறங்கிவிட்டனர்.
பாரதிய ஜனதா அலுவலகத்தை தாக்கிய அதேநபர்தான் ராஜ்பவனை தாக்கியுள்ளார். இந்த தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
தற்போது இந்தப் பிரச்னையை எப்படி திசை திருப்பலாம் என மு.க. ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“