மதுரையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீதிப் பேரணியில் பங்கேற்க சென்ற திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க மகளிரணியினர் சிலரை, போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களை பார்க்க சென்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், காவல் துறையினரை கண்டித்ததுடன், பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தை ஒட்டி செயல்பட்டுவந்த தனியார் மதுபானக்கூடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்று, சட்ட விரோதமாக அங்கு மதுபானம் விற்கப்படுவதாக தெரிவித்தார். அந்த வீடியோவில் காவல்துறையைக் கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பணியாளர்களைத் தாக்கியது உள்பட 5 பிரிவுகளில் பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் இன்று மாலை கொடைக்கானல் சென்று விட்டு தனது காரில் பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல்துறையினர், சோதனைச் சாவடியில் காத்திருந்த போலீசார், பா.ஜ.க மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பா.ஜ.க மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பா.ஜ.க திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பழனி நகர காவல் நிலைய முன்பாக ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பா.ஜ.க மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தனியார் மதுக்கடையைக் காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை பா.ஜ.க-வின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியதற்காக அவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள். இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய திமுக அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகக் காவல்துறையும் திமுகவின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ்-ஐ உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“