நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்ற சட்டப்பேரவை சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை, சபாநாயகர் சரியாக நடந்து கொள்ளாததால் ஆளுநர் அவையில் இருந்து நேற்று வெளியேறினார் என்று கூறுவதற்கு பதிலாக "ஆளுநர்" மோசமாக நடந்து கொண்டார்.. அதனால் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பேசி குழப்பமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை நேற்று ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை 2 நிமிடங்கள் மட்டுமே வாசித்து நிறைவு செய்தார்.
இந்தநிலையில், சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஆளுநர் என்று கூற வேண்டிய இடத்தில் சபாநாயகர் என்றும், சபாநாயகர் எனக் கூற வேண்டிய இடத்தில் ஆளுநர் என்றும் கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார். அண்ணாமலை தனது பேட்டியில் கூறியதாவது;
“நான் ஆளுநர்கிட்ட கேக்குறேன், தி.மு.க அரசின் 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கு. ஆளுநர், அவங்ககிட்ட இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொடுக்கட்டும். அதே வார்த்தைய ஆளுநர்கிட்ட திருப்பிக் கேக்குறதுக்கு எவ்வளவு நேரமாகும், முதல் குடும்பத்துல இருந்து பணம் வாங்கிக் கொடுங்கன்னு. ஆளுநர் அவர்கள் முறைதவறி நடந்து கொண்டதன் காரணமாக ஆளுநர் அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக நான் பார்க்கிறேன். இன்னைக்கு ஆளுநர் மாத்திப் பேசலாம். ஜன கண மன போட்டா அதுக்கு முன்னாடியே போயிட்டார்ன்னு. ஆளுநர் அவர்களுக்கு இங்கே எந்த பிஸ்னசும் கிடையாது. கவர்னர் சொல்றதுல தப்பு இருக்கா, ரைட் இருக்கா அதை சபையில இருக்கக் கூடிய உறுப்பினர்கள் டிஸ்கஸ் பண்ணட்டும்.
அது அவைக்குறிப்புல போகணுமா வேண்டாமா, உறுப்பினர்கள் டிஸ்கஸ் பண்ணட்டும். ஆளுநர் வந்து ஒரு நியூட்ரல் ஜட்ஜ். அவர் தி.மு.க.,வுடைய உறுப்பினர் கிடையாது. ஆனா தி.மு.க.,வுடைய உறுப்பினரை விட மோசமாக ஆளுநர் அவர்கள் நேற்று நடந்து கொண்டார். அதனால்தான் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், வெளிநடப்பு செய்ய வேண்டி வந்துச்சு” என்று பேசிய அண்ணாமலையிடம், அங்கிருந்தவர்கள் சபாநாயகர் என்று திருத்தியதை அடுத்து, சபாநாயகர் தவறா நடந்துகிட்டதால் தான் ஆளுநர் வெளிநடப்பு செய்ய வேண்டி வந்துச்சு என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“