தவழ்ந்து வந்து முதல்வர் ஆன பழனிசாமிக்கு என்னை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக சார்பில் நேற்று (ஆக.25) பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய அண்ணாமலை, ’திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன. காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியை கொடுத்தனர். தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது.
பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்திலிருந்த தமிழகம், தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்து, நான்காம் இடத்தை நோக்கி செல்கிறது. அடுத்த, 25 ஆண்டுகளில் என்ன வேண்டும் என்று சிந்தித்து, அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். எந்த முடிவு எடுத்தாலும், அவர்கள் கஜானா நிரம்புமா என்று பார்க்கின்றனர்.
அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு போன்றோர் இருக்கும்போது, அரியணை உதயநிதிக்கு சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார். துணை முதல்வராக உதயநிதி எப்போது வருவார்; அவர் வந்து விட்டால், தங்கள் பிள்ளைகளை முக்கிய பதவிக்கு நகர்த்தலாம் என்று, அமைச்சர்கள் நினைக்கின்றனர்.
இன்று மாலை சென்னையில், @BJP4Tamilnadu சார்பாக, கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சி சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
— K.Annamalai (@annamalai_k) August 25, 2024
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், கடுமையாக உழைத்த மாநில, மாவட்ட… pic.twitter.com/UaKes7oXIk
திமுகவினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை வேரறுப்போம் என உதயநிதியும், சனாதனத்தை வெட்டி எறிய வேண்டும் என்று சேகர்பாபுவும் பேசினார்.
இப்போது முருகன் பெயரை வைத்து பழனியில் பால்காவடி துாக்குவதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்கின்றனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழித்தவர்களை முருகன் தண்டிப்பார்.
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும். நமக்கு திமுக, அதிமுக இருவரும் எதிரிகள்தான்.
பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். நேர்மை குறித்து பழனிசாமி எனக்கு பாடம் நடத்த வேண்டாம். கூவத்துாரில் டெண்டர் சிஸ்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் அவர்.
காலில் விழுந்து தவழ்ந்து பதவி பெற்ற பழனிசாமிக்கு, ஒரு விவசாயியின் மகனை, ஒரு பைசா வாங்காத அண்ணாமலையை பற்றி பேச, எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. வரும், 2026ல் அ.தி.மு.க.,வுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது.
தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இருவரும் நமக்கு பரம எதிரிகள். தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எப்போதும் கூட்டணி வராது. ஆட்சிக்கு வர, 2026ஐ விட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது.
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களில் பாஜக தனித்து நிற்கும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும்’, என அண்ணாமலை பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.