பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட யாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவிநாசி சிந்தாமணியில் நேற்று தொடங்கினார். இதனை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நடை பயணம் அவிநாசி சேவூா் சாலை, கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பியூஷ் கோயல் பேசியதாவது: ஊழல் இல்லாத தமிழகத்தை பிரதமா் மோடி உருவாக்க நினைக்கிறார். இந்தியாவில் அதிக ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.
நமது நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி தி.மு.க மட்டும்தான். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஊழல் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகிய இருவரும் ஊழலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விசைத்தறி தொழில் மின்கட்டண உயர்வால் வளராமல் உள்ளது. நெசவாளர்களுக்கு மின்சாரம் இல்லை. தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
ஊழலின் மொத்த உருவாக இருக்கும் தி.மு.க. மற்றும் அதற்கு ஊதுகுழலாக இருக்கிற காங்கிரசை வரும் காலத்தில் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.
காந்தி, விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட சனாதனத்தை இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். வரும் தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராசா உட்பட அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
பா.ஜ.க-வுக்கு சேவை செய்ய தமிழகத்தில் வாய்ப்பு கொடுத்தால், காவிரி உள்ளிட்ட தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்திடுவோம். விவசாயிகள் அல்லது பொதுமக்கள் குறித்து தி.மு.க கவலைப்படுவதில்லை. கான்ட்ராக்டரிடம் எவ்வளவு பணம் வாங்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். வாரிசு அல்லாமல் சாதாரண விவசாயி மகனை தமிழகத்தில் களமிறக்கியிருக்கிறோம், என்றார்.
அண்ணாமலை பேசுகையில், ’நாடு முழுவதும் 1992-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரை 25 ஆண்டுகளில் 1,200 தொன்மை வாய்ந்த சிலைகள் காணாமல் போயுள்ளன. 2014-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரை 361 சிலைகளை பிரதமர் மோடி மீட்டுள்ளார்.
இதில் தமிழகத்தில் திருடப்பட்ட சிலைகளும் உள்ளன.
1985-ம் ஆண்டு 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்தது. 2023-ம்ஆண்டு கணக்குப்படி, 3.25 லட்சம்ஏக்கர் தான் உள்ளது. 40 ஆண்டுகளில் 2 லட்சம் ஏக்கர் நிலத்தை காணவில்லை.
அதிமுக ஆட்சி நிறைவுறும்போது, அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணி 87% நிறைவுற்றிருந்தது. ஆனால், 30 மாதங்களாக ஆட்சி நடத்தும் திமுக 13 % பணிகளைக்கூட முடிக்கவில்லை.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி, நெசவாளர்களிடம் பள்ளிச் சீருடை, நூலுக்கு அரசு கொள்முதல் அமைப்போம் என்றார்கள். இவற்றை செய்தார்களா? மக்களவைத் தோ்தலில் 400 இடங்களைப் பிடித்து, தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் வலுவான ஆட்சி அமைக்கும், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“