ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க 3 மாதம் சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். மேல்படிப்பிற்காக லண்டன் சென்றாலும் அறிக்கை மூலம் பேசிக் கொண்டே இருப்பேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புகாக, தமிழக பா.ஜ.க தலைவர் செல்ல உள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு லண்டன் செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும். வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன்.
பா.ஜ.க,வில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம். தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.க.,வில் இணைவர். உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜ.க பயணம் மேற்கொள்கிறது. பா.ஜ.க தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம்.
முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன. கடந்த 3 முறை வெளிநாட்டு பயணம் தோல்வியில் முடிந்ததை போல் அமெரிக்க பயணமும் தோல்வியில் முடிந்து விடக்கூடாது. பெரிய திட்டங்களுடன் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஏதேனும் நன்மையை தமிழகத்திற்கு கொண்டுவருகிறாரா என பார்ப்போம். அமெரிக்காவில் அதிக தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் பேசினாலே ஆயிரக்கணக்கான முதலீடுகளை தமிழகம் கொண்டு வரலாம். முதலமைச்சரின் முதல் 3 வெளிநாடு பயணத்தையும் தோல்வி பயணமாக தான் பார்க்கிறேன். சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் பயணங்களை மேற்கொண்ட முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடாதது ஏன்? கடந்த வெளிநாட்டு பயணங்களில் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? அதன் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை தேவை.
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவீன மயமாக்கப்பட்ட மாநில அரசு பி.எம் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்திற்கு வேண்டும் என தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது. திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட தமிழக அரசு மும்மொழி கொள்கை இருப்பதால் கையெழுத்திட மறுக்கிறது.
கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். அரசியலில் மக்களின் பார்வை மாறிவிட்டது. 40 சதவீத வாக்காளர்கள் 39 வயதுக்குக் கீழ் இருக்கின்றனர். இந்தியா மாறிவிட்டது. அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் டை அடித்துக் கொண்டால், அவர்கள் இளைஞர்கள் ஆகிவிடுவார்களா? மக்களிடம் பேசுவதிலும், செயலிலும் தான் இருக்கிறது. இளமை. தலையில் டை அடிப்பதில் இல்லை. இ.பி.எஸ்., மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பப் பேசுவேன். நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“