காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன் பாஜகவைச் சேர்ந்த டெய்சி, திருச்சி சூர்யா சிவா ஆடியோ வெளியான போது, டெய்சிக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் ட்விட் செய்தார்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறி, காயத்ரி ரகுராமை 6 மாதம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த நவம்பரில் அறிவித்தார்.
மேலும், அவர் வகித்து வந்த பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மையான தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை. நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அவரது தலைமையின் கீழ் செயல்பட முடியாது. எனது புகார் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தக்கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் 2 மாதமாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் இதுவரை நடத்தவில்லை என்றார்.
இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை புதன்கிழமை (ஜன.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன். விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மவுனம் தான் என்றார்.
பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணாமலைக்கு எதிராக தொடர் வார்த்தை தாக்குதல்களை நடத்தி வரும் காயத்ரி ரகுராம் இப்போது ட்வீட்டரின் வாயிலாக அவரை விவாதத்துக்கு அழைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று ட்வீட்டரில் வெளியிட்ட பதிவில், நான் ராஜினாமா செய்ய முடிவு செய்ததற்குக் காரணம்
1. நடத்தை படுகொலைக்காக உறுப்பினராக இருந்து அண்ணாமலையுடன் என்னால் சண்டையிட முடியாது
2. திருப்பதி நாராயணன் சொன்னது போல பெண்ணின் பாதுகாப்பை விட கட்சியில் ஒழுக்கம் முக்கியம்.
அதனால் குரல் கொடுப்பதற்காக என் ஒழுக்கத்தை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
என்னை திமுக ஸ்லீப்பர் செல் உறுப்பினர் என்று முத்திரை குத்துவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். என் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறேன்.
அண்ணாமலை எனக்கு உங்கள் வாழ்த்துகள் தேவையில்லை. என் நடத்தையை படுகொலை செய்ததற்கு உங்கள் மன்னிப்பு மட்டுமே எனக்குத் தேவை. நான் சோகமாக ராஜினாமா செய்ய முடிவெடுப்பதற்கு முன்பு நீங்கள் என்னை ஒருபோதும் வாழ்த்தவில்லை.
அண்ணாமலையுடன் ஒரு நேர்காணலை நடத்த விரும்புகிறேன். அவர் வெளியே வந்து என்னை எதிர்கொள்வாரா? உண்மையைச் சொல்லுங்கள்.. உண்மையை உலகம் அறியட்டும், இவ்வாறு காயத்ரி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“