நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு; யாரை ஏமாற்ற நாடகம் என மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் 6 ஆண்டுகள் தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை.
அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று மு.க ஸ்டாலின் கூறுவாரா?
பிரதமர் நரேந்திர மோடி அரசு கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாக தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியுமா?
மாநிலங்களின் நலனுக்காக மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி நலத்திட்டங்களைப் பெற வேண்டும்.
அதனை விட்டுவிட்டு நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் மு.க. ஸ்டாலின்?
தொகுதியின் தேவைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை.
தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால் பாதிக்கப்படுவது தமிழக மக்களே” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“