Advertisment

முன்னாள் நீதிபதி சந்துரு திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரா? அண்ணாமலை கேள்வி

'தனது அறிக்கைக்கு வந்த எதிர்ப்புகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், நீதிபதி திரு.சந்துரு, திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக, புதிய அவதாரம் எடுத்துள்ளார்.' அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Annamalai has questioned whether former judge Sanduru is DMKs policy secretary

முன்னாள் நீதிபதி சந்துரு திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரா என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியல் பேச விருப்பம் இருந்தால் முன்னாள் நீதிபதி சந்துரு தி.மு.க.வில் இணையலாம்; அதை விடுத்து... என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி. முன்னாள் நீதிபதி சந்துரு என்பவர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை, முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு, அதில் உள்ள பரிந்துரைகள் குறித்த விவரங்கள், ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.

Advertisment

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவை. மாணவ சமுதாயத்தினரிடையே வேற்றுமையை விதைப்பவை. எனவே, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும், இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த குறிப்பிட்ட அம்சங்களுக்கு, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். தமிழக பாஜக சார்பில், கடந்த ஜூன் 19 அன்று, ஊடகவியலாளர்கள் சந்திப்பில், இந்த அறிக்கையில் உள்ள ஏற்றுக் கொள்ள முடியாத பரிந்துரைகள் குறித்துப் பேசியிருந்தோம்.

இந்த சந்தேகம் இப்போது ஏன்?

குறிப்பாக, கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பரிந்துரை. இந்த சமூகங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரின் கல்வி குறித்தோ, இத்தனை ஆண்டுகளில், அவர்களின் சமூக முன்னேற்றம் குறித்தோ எந்த ஆய்வு முடிவுகளும் இல்லாமல், எப்படி இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியும்?

அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையினராக இருக்கும் சமூக ஆசிரியர்களுக்கு, அந்த பள்ளிகளில் உயர் பதவிகள் மறுக்கப்படுவது என்ற ஒரு பரிந்துரை.

கல்வியின் பொற்காலமான பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காலத்தில் இருந்து இத்தனை ஆண்டுகளாக ஆசிரியப் பெருமக்கள் மீது ஏற்படாத இந்த சந்தேகம், இப்போது ஏன் வருகிறது?

பரிந்துரை நகைச்சுவைகள்

பெயரின் முதல் எழுத்து வரிசைப்படி, மாணவர்களை அமர வைப்பது, சமூக நீதி மாணவர் குழு என்று ஒன்றை உருவாக்குவது என்ற நகைச்சுவைப் பரிந்துரைகள். பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் எல்லாம், ஆளுங்கட்சியின் குழு தலையிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மாணவர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனித கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மத மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடியுமே தவிர, வேறு எந்தக் காரணம் கூறினாலும், அது திமுகவின் நாடகமே.

பள்ளிகளில், மாணவர் தேர்தல் நடத்துவது என ஒரு ஆபத்தான பரிந்துரை. கல்லூரித் தேர்தல்களில் புகுந்து திமுக உள்ளிட்ட கட்சிகள், மாணவ சமுதாயத்தைப் பாழ்படுத்தியது போதாதா? உங்கள் அரசியல் லாபத்துக்காக, பள்ளி மாணவர்களையும் பலியிட வேண்டுமா?

எனவேதான், கடந்த ஜூலை 6 அன்று நடந்த எங்களது செயற்குழு கூட்டத்தில், நமது நாட்டின், நமது சமூகத்தின் அடையாளங்களை, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் இந்த முன்னாள் நீதிபதி சந்துரு அறிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.

சந்துரு கேள்வி- அண்ணாமலை பதில்

இதனால் சந்துரு அவர்கள் வருத்தப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஒரு விழாவில், இந்த அறிக்கை குறித்துப் பேசுகையில், நூலகம், அறநெறி குறித்தெல்லாம் பேசி, இவற்றைப் பற்றி பாஜகவுக்கு என்ன தெரியும் என்று கூறியிருக்கிறார்.

சந்துரு அவர்கள் குறிப்பிட்ட, எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்ததும், பிரதமர் மோடி அவர்கள் அரசுதான்.

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் குழுவில் இருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் திரு. சந்துரு அவர்கள், எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்று முதலில் கேட்டுக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒரு நபர் குழு, இதர குழு எனப் பல குழுக்களில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முன்னாள் நீதிபதி சந்துரு அளித்திருக்கும் அறிக்கைக்கு வந்திருக்கும் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

விளக்கம் அளிக்க வேண்டியது சந்துரு அல்ல

சந்துரு அவர்களே. இங்கே எதிர்ப்பு தெரிவித்திருப்பது. தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும்படியான, அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தானே தவிர, நீங்கள் எழுதிய தொடர்கதைக்கோ, நாவலுக்கோ அல்ல. அதற்குப் பதிலளிக்க வேண்டியது தமிழக அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல.

திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் ஏன் மாணவ சமுதாயத்தினரிடையே இது போன்ற ஜாதியப் பிரிவினைகள் பெருமளவில் இல்லை என்பதுதான் சந்துரு அறிக்கையின் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அந்தக் கேள்வியை முன்வைக்க, பாரபட்சமில்லாத நபராக இருந்திருக்க வேண்டும். அறிக்கையின் பரிந்துரை எண் 19 (c) ល់, காவிமயமாக்குதல் (saffronization) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும், இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

அரசியல் பேச விருப்பம் இருந்தால்...

சந்துரு அவர்களே. அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி. திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு, அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம்.

அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

BJP Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment