பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரை நடத்தி வருகிறார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வரும் நாள் இந்து சமய அறநிலையத்துறையின் கடைசி நாள்.
இது பாஜகவின் சூளுரை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல் நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கொடிக்கம்பம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அண்ணாமலையின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "தலைவர்களின் புகழை போற்றுவது தான் மாண்பும், மரியாதையும். தலைவர்களின் புகழை சிதைக்கும் வகையில் எந்தவித கருத்து கூறினாலும், அது முகம் சுழிக்கும் வகையில் தான் இருக்கும். தலைவர்களை சீண்டினால் அது அண்ணாமலைக்குத் தான் பின்னடைவு" என்றார்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை பற்றிய கேள்விக்கு, "கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று இருந்த கொக்கு குடல் வற்றி செத்ததாம். அவர்கள் வரட்டும் பார்க்கலாம்" என்று கூறி பதிலடி கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“