"தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கை; இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்": அண்ணாமலை பேட்டி

"கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர், மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் கடைசி இடத்தில் உள்ளது. பீகாரில் பல மாவட்டங்கள் அதைவிட சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளன. நாம் இங்கு என்ன வளர்ச்சியைப் பற்றி பேசுகிறோம்?"

author-image
WebDesk
New Update
Annamalai interview

மும்மொழிக் கொள்கையைக் குறிவைத்து, மத்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாகவும், மாநில நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறவுள்ளதாகவும் தி.மு.க குற்றம்சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேட்டியளித்தார். அப்போது, 2026-ஆம் ஆண்டு தி.மு.க-வை அகற்றும் வரை தான் காலணி அணிய மாட்டேன் என்று அவர் கூறினார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Annamalai interview: ‘Stalin a hypocrite, allows three-language formula to flourish in Tamil Nadu’s private schools’

 

Advertisment
Advertisements

தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை பாதிக்கும் என்று தி.மு.க கூறுகிறது. விகிதாச்சார அடிப்பையில் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என்று கூறிய அமித்ஷா, அது தொகுதி விகிதாச்சாரமா அல்லது மக்கள் தொகை விகிதாச்சரமா என்று தெரிவிக்க வேண்டும் என ஆ. ராஜா வலியுறுத்துகிறார். இந்த விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமல்ல, ஒட்டுமொத்தக் கட்சியினரும் மாயத்தோற்றத்தில், கற்பனை பயத்தின் அடிப்படையில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு மூலம் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய பின்னரும் இவ்வாறு கேள்வி எழுப்புகின்றனர். 

தேசியக் கல்விக் கொள்கையில் (NEP) மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு நிராகரித்து, இந்தித் திணிப்பு எனக் கூறுவது குறித்து உங்கள் கருத்து?

மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். அவர், தனது குடும்பத்தினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கிறார். தி.மு.க-வின் இரட்டை வேடத்தை மக்கள் இப்போது கண்டு கொண்டார்கள். இதில் இருந்து கவனத்தை திசை திருப்ப மும்மொழிக் கொள்கைக்கு இந்தி திணிப்பு என்று சாயம் பூசுகின்றனர்.

வட இந்திய மொழிகள் பலவற்றை இந்தி அழித்து விட்டதாகக் கூறியுள்ள மு.க. ஸ்டாலின், அதைத் தமிழகம் தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார். அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நம்பத்தகாத தகவல்களை நம்பி வெளியிட்டதற்காக சமூக வலைதளங்களில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவை பார்த்தேன். சமூக வலைதளங்களில் முதல்வர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் பொது இடங்களில் இந்தி பெயர் பலகைகளை அழிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கும் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் செல்லுமாறு நான் பரிந்துரைத்தேன். இதன் விலாசம் தெரியவில்லை என்றால், அங்கு அடிக்கடி செல்லும் தி.மு.க அமைச்சர்களை கேட்டறிந்து கொள்ளலாம். இது 1960 அல்ல என்பதை தி.மு.க-வினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முட்டாள்தனமான பிரசாரத்தால் மக்கள் சலிப்படைந்து விட்டனர். ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை மக்கள் விரும்புகிறார்கள்

திராவிட இயக்கத்தின் வலுவான நம்பிக்கையான ஆரியர்கள் Vs திராவிடர்கள் என்ற தி.மு.க-வின் நிலைப்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஆரிய - திராவிடக் கோட்பாட்டிற்கு சரியான இடம் குப்பைத் தொட்டி என பாபாசாகேப் அம்பேத்கர் கூறினார். மக்களை பிளவுபடுத்த தி.மு.க புதிய காரணங்களை உருவாக்குகிறது.

தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் பா.ஜ.க முன்னேற்றம் அடைவது ஏன் கடினமாக உள்ளது?

1949-ல் தி.மு.க-வும், 1970-களின் தொடக்கத்தில் அ.தி.மு.க-வும் உருவானது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று மாநிலத்தில் 3%-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழக அரசியலில் பா.ஜ.க காலதாமதமாக நுழைந்தது. அதற்குள் இரண்டு வலுவான தலைவர்கள் ஏற்கனவே களத்தில் இருந்ததால், நாங்கள் வளருவது கடினமாக இருந்தது. இருப்பினும், 2014-இல் நரேந்திர மோடி பிரதமரான பிறகு பா.ஜ.க ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்கத் தொடங்கியது. நாங்கள், எங்கள் இருப்பை வலுவாக உணர்கின்றோம். இன்று 11.5% வாக்குகளைப் பெற்றுள்ளோம். 2026-ல் அதிவேகமாக மேம்படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

தமிழ்நாட்டிற்கும், வடக்கிற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் வகையில் காசி தமிழ்ச் சங்கமத்தை மத்திய அரசு ஊக்குவித்துள்ளது. பிரதமர், தமிழ் மொழி மற்றும் செங்கோல் குறித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்திற்கு ராஜா ஆதித்ய சோழனின் பெயரை சூட்டியுள்ளார். பா.ஜ.க-வை தமிழர் விரோதிகள் என்று தி.மு.க  குறிவைப்பது ஏன்?

தி.மு.க-வின் நிலைப்பாடு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. கர்மவீரர் காமராஜர் ஐயாவுக்கும் அவ்வாறே செய்தார்கள். ஆரம்பத்திலிருந்தே இதுதான் இவர்களின் அரசியல். நாங்கள், தமிழக மக்களின் ஆதரவை நாடுகிறோம். அதற்கான சான்று தான் எங்களின் வாக்கு வங்கி உயர்வு

ஆனால் தி.மு.க-வை எதிர்கொள்ள உங்களின் உத்தி என்ன?

நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் தி.மு.க, மாயத்தோற்றத்துடன் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறது. தொடர்ந்து, பல்வேறு கேள்விகளை முன்வைப்போம்.

அ.தி.மு.க-வுடன் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா?

நமது பிரதமரின் கொள்கைகளை மாநிலம் முழுவதும் கொண்டு செல்வதே எனது கடமை. மாநிலத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சியை உறுதி செய்வதே எனது கடமை. கூட்டணி என்பது இந்த நேரத்தில் நாங்கள் விவாதிக்க விரும்பும் ஒன்று அல்ல. ஆனால் சரியான நேரத்தில், எங்கள் தேசிய தலைமை முடிவு எடுக்கும்.

சிறந்த கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு திராவிட மாடல் வழிவகுத்தது என்று தி.மு.க கூறுகிறது. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

சீரழிந்து வரும் கல்வி நிலை குறித்து நடவடிக்கை எடுக்க ASER அறிக்கையை நான் மேற்கோள் காட்டினேன். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்விலும் இதே போன்ற கண்டுபிடிப்புகள் உள்ளன. GER 2% குறைந்துள்ளது. கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர், மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசி இடத்தில் உள்ளது. பீகாரில் பல மாவட்டங்கள் அதைவிட சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளன. நாம் இங்கு என்ன வளர்ச்சி பற்றி பேசுகிறோம்?

தமிழகத்தில் தி.மு.க தோற்கடிக்கப்படும் வரை காலணி அணிய மாட்டேன் என்ற உறுதிமொழியை காப்பாற்றுகிறீர்களா?

2026-ல் தி.மு.க-வை அகற்றும் வரை நான் காலணி அணிந்திருப்பதைக் கண்டால், என்னிடம் நீங்கள் தாராளமாக கேள்வி எழுப்பலாம்.

- Vikas Pathak

Annamalai Tamilnadu Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: