Janardhan Koushik
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை கருத்தில் கொண்டு களம் இறங்கியிருக்கிறார் அண்ணாமலை குப்புசாமி. இவருக்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்புகள் சரிசம அளவிலேயே உள்ளது. கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியான இவர், தெற்கு பெங்களூருவின் போலீஸ் துணை கமிசனராகவும், உடுப்பி சிங்மங்களூரு பகுதியின் போலீஸ் எஸ்பி ஆகவும் பணியாற்றியுள்ளார். ஐபிஎஸ் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்த அண்ணாமலை, சொந்த ஊரான கரூரில் இயற்கை விவசாயத்தில் இறங்கினார். இளைய தலைமுறையினரிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது அதில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வண்ணம், ‘We The Leaders Foundation’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
2020ம் ஆண்டின் துவக்கத்திலேயே இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசியலில் இறங்குவதற்காக, தான் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். அரசியலில் தனக்கு பிடித்த நபர் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக அரசியலில் களம் காண திட்டமிட்டுள்ள அண்ணாமலை உடன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்காக ஒரு பேட்டி
போலீஸ் வேலையை துறந்துவிட்டு, சேவை மனப்பான்மை அமைப்பை ஏன் துவக்கினீர்கள்?
ஒரே வேலையில் நம் வாழ்நாள் முழுவதும் இருந்துவிடக்கூடாது என்று 1980, 90களிலேயே திட்டமிட்டுவிட்டேன். ஒரு பணியில் நீங்கள் இருந்தால், அதன்மூலம் உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிகழ்வு எந்த வாழ்க்கையில் நடந்தது. காவல்துறையில் தான் இருந்தபோது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன தேவை என்ற புரிதல் தனக்குள் ஏற்பட்டது. குற்றச்செயல்களை ஒழிப்பதற்காகவே, நான் காவல்துறையை தேர்ந்தெடுத்தேன். ஆனால், அதுவோ என்னை வேறு பரிமாணத்திற்கு அழைத்துச்சென்றது. காவல்துறையில் பணியில் இருக்கும்போதே, இந்த சிஸ்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை கண்கூடாக பார்த்தேன். நெருங்கிய நண்பரின் மரணம் காரணமாக, 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பணியை துறந்தேன். என்னுடைய வாழ்க்கை எத்தகையது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிவிட தீர்மானித்தேன். ஆனால், அங்கு என்ன செய்வது என்ற திட்டம் எதுவும் அப்போது என்னிடம் இல்லை. இதற்காக அந்த ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் சுற்றினேன். அப்போதுதான் இந்த சமூகம் நலம் அடைய இரண்டு காரணங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டேன். அதில் ஒன்று, இளைஞர்களுக்கு திறன்வாய்ந்தவர்களாக மாற்றுவது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவர்களுக்குள்ளாகவே, உதவும் மனப்பான்மையை வளர்ப்பது என்று முடிவெடுத்தேன்.
கரூரில், ‘Sun Rise’ என்ற அமைப்புடன் இணைந்து, அங்குள்ள மாணவர்களிடம் மொழியறிவு திறனை வளர்த்து அவர்களை நல்ல இடங்களில் பணியமர்த்தினோம். கரூர், கோவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தினோம். இந்த அமைப்பில் நான் தொண்டனாகவே செயல்பட்டு இந்த மாற்றத்தை உருவாக்கினேன்.
வாழ்வின் அடிப்படை நிலையில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி அவர்களையும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டோம். விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், விதைகள், விவசாயம் குறித்த புரிதல் அறுவடைக்கு பின் அவர்களது தயாரிப்புகளை அதிக விலைக்கு விற்று அவர்களுக்கு லாபத்தை பெற்றுத்தரும் பொருட்டு ஒரு அமைப்பை உருவாக்கினோம். இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டேன். இதன்மூலமாக மட்டுமே விவசாயிகளுக்கு நன்மை என்பதால் இதை பிரபலப்படுத்த எண்ணி முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றேன்.
பிரதமர் மோடி மற்றும் அவரின் அரசியல் குறித்து?
அரசியலில், பிரதமர் மோடியின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு விவகாரங்களில் அவர் தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். ஜிஎஸ்டி வரி, இது சாத்தியமற்றது என்று அனைவரும் சொன்ன நிலையில், அதை நடைமுறைப்படுத்தி காட்டினார் மோடி.. டிமானிடைசேஷன் நடவடிக்கையும் அவர் துணிவாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் மிக முக்கியமானது ஆகும். பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு, மாவோயிஸ்ட்கள் அட்டகாசம் முதலிய அச்சுறுத்தல் ஒடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவப்த 370வது சட்டப்பிரிவை நீக்கியதால் நமக்கு நீண்டகால பலன் கிடைக்கும் என்பதே எனது கணிப்பு.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (CAA/NRC) விவகாரங்களில், அடித்தட்டு மக்களிடையே அதற்கான சரியான புரிதல் இல்லாததே, இந்தளவு போராட்டங்கள் நிகழ காரணம். இந்த விவகாரங்களில் மத்திய அரசு என்ன சொல்கிறது என்பதை கேட்க யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
2021 தேர்தலில் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அது குறித்து?
இந்திய அரசியலில் மாறுபட்ட கருத்துடன் ஒருவர் வந்தால் அவரை பற்றிய தவறான கருத்துகள் உடனடியாக பரப்பப்படுகின்றன. அவரது அந்தரங்க வாழ்க்கை குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது, இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இன்னும் சில மாதங்களில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளார். அப்போதுதான் அவரது கட்சியின் கொள்கைகள் தெரியவரும். இந்த சிஸ்டத்தில் அது எத்தகைய மாற்றத்தை கொண்டுவரப்போகிறது என்பது தெரியும். நான் இதுகுறித்து ரஜினியுடன் விவாதித்ததாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. இந்நாட்டின் விவசாயிகள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு என்னால் முடிந்த ஏதாவது நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணமே தற்போது எனக்குள் இருக்கிறது. நான் ஒரு செயலை முடிக்காமல், அடுத்த செயலுக்கு இதுவரை சென்றதில்லை, இனி செய்யவும் மாட்டேன். ரஜினி சார் கட்சி துவங்குவார் என்பதில் நானும் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் சூப்பர் ஸ்டார், நான் சாதாரண மனிதன். இந்த விவகாரம் இத்தோடு போதும் என்று நினைக்கிறேன்.
பா.ஜ. ஆதரவாளர் என்ற முத்திரை உங்கள் மீது குத்தப்படுகிறது. அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
சிலர் என்னை பார்த்து வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று கேட்கின்றனர். என்னுள் இரண்டு சித்தாந்தங்களும் உள்ளன. எனது மூளை வலது என்று சொல்லும்போது இதயம் இடது என்று சொல்லும். எனக்கு மோடியை பிடிக்கும் என்பதால், அவர்கள் என்னை பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களாக நினைக்கின்றனர். இதுகுறித்து வந்துள்ள மீம்களை நானும் பார்த்துவருகிறேன். இந்தியா, ஜனநாயக நாடு, இங்கு யாரும் எந்தவொரு கருத்து சொல்லவும் இங்கு உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. அவர்களின் கேள்விகளுக்கு நான் என்னுடைய செயல்களின் மூலம் பதிலளிக்க விரும்புகின்றேன்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கால் ஊன்றமுடியாததற்கு எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு தனிச்சிறப்பு கொண்ட மாநிலம். இங்கு மாநிலவாரியான அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. இங்குள்ள ஒவ்வொரு மாநில கட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக ஒரு கட்சி நிலைப்பெற வேண்டுமானால், அவர்கள் கடின உழைப்பை அடிமட்டத்திலிருந்து செய்ய வேண்டும். தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும், இங்கு நிலைப்பெறாததற்கு காரணம் அவர்களுக்கு இங்கு சரியான அடிப்படை இல்லாததே காரணம் ஆகும்.
2014 நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு இருந்தது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றது. பல்வேறு இடங்களில்,மற்ற கட்சிகளின் வாக்குகள் பிரிவதற்கு பாரதிய ஜனதா கட்சி பெரிதும் காரணமாக அமைந்திருந்தது. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியவில்லை, அதற்காக அது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை, ‘Go Back Modi’ உள்ளிட்ட எதிர்வினைகள், அக்கட்சிக்கு பாதகமாக அமைந்துவிட்டன. இதன்காரணமாகவே, மோடி தலைமையிலான அமைச்சரவையில் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. பிரதமர் மோடி சமீபகாலமாக தமிழ் மொழியின் சிறப்புகள், பாரம்பரியம் குறித்து பல்வேறு இடங்களில் பேசிவருகிறார். பிரதமர் அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே ஆவர்.
தமிழகத்தின் நலனுக்கு மாறாகவே பாரதிய ஜனதா கட்சி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனவே?
நீட் தேர்வை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மாணவர் சேர்க்கையில் பொதுவான முறை வர வேண்டும் என்பதற்காகவே, இந்த நீட் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில், பல ஆண்டுகளாக, மாநில வாரியான கல்விமுறை அமலில் உள்ளது. இந்த மாணவர்களை, உடனடியாக சிபிஎஸ்இ கல்விமுறைக்கு மாற்றுவதால் அவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழகத்திற்கு சில ஆண்டுகள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருக்க வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், கிராமப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கான பாடப்பகுதிகளை பெறவே மிகவும் கஷ்டப்பட்ட வருவதையும் நாம் மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் இருந்து கேட், ஐஐடி, ஜிப்மர் போன்ற தேர்வுகளில் மாணவர்கள் சிறந்துவிளங்கும் நிலையில், விரைவில் நீட் தேர்விலும் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குவர் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விவகாரத்தில், கல்வித்துறை விரைந்து தீர்வு காண வேண்டும்.
2021 சட்டசபை தேர்தல் குறித்த உங்களது பார்வை? மற்ற தேர்தல்களிலிருந்து இது எப்படி வேறுபடும்?
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மிக கடினமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கொரோனா தொற்று முடிவடைய உள்ள நிலையில் நடைபெற உள்ள தேர்தலில், சமூகவலைதளங்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி – தோல்வி சதவீதம் மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பது என் கருத்து.
சாத்தான்குளம் விவகாரம் தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரியான உங்களின் கருத்து?
இது மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் கடைநிலை அதிகாரிகளுக்கும் போதிய தொடர்பு இல்லாததே இதை காட்டுகிறது. உயர்அதிகாரிகள் மீது மரியாதை மதிப்பு இல்லாத சிலர் தான் இத்தகைய கொடுஞ்செயல்களில் ஈடுபடுகின்றனர். ஊரடங்கு நேரத்தில் விதியை மீறி கடையை திறந்தால், அவரை போலீஸ் ஸ்டேசன் கொண்டு செல்வதற்கான அவசியமே இல்லை, அங்கு அவர்களை அடித்துள்ளனர். சாத்தான்குளம் விவகாரம், தமிழக காவல்துறைக்கே பெரும் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.இந்த ஒரு விவகாரத்திற்காக, நாம் ஒட்டுமொத்த காவல்துறையையும் தவறு சொல்லிவிட முடியாது. இந்த விவகாரம், காவல்துறையில் உள்ள அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. ஒரு அளவுக்கு மீறி எதுவும் செய்தால், அது மீண்டும் நம்மை தாக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்பதை மறந்துவிட இயலாது. போலீசார் எந்த விவகாரத்திலும் விரைந்து தண்டனை அளிக்க முற்படக்கூடாது. யாரும் சட்டத்தை எக்காரணத்தை கொண்டும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எவ்விதமான வழிமுறைகள்
போலிஸ் அதிகாரிகளுக்கு இன்னும் சிறந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். போலீசார் ஷிப்ட் முறையில் பணிசெய்ய அனுமதி அளிக்கப்பட வேண்டும். நான் பெங்களூரு டிசிபி ஆக இருக்கும்போது, போலீசார் 10 மணிநேரத்திற்கும் மேல் பணி செய்ய ஒருபோதும் அனுமதித்ததில்லை. அதிகநேரம் பணிசெய்தால், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அதன்காரணமாகவே, சாத்தான்குளம் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு பதவியுயர்வின் போதும் அவர்களுக்கு சில சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மனித உரிமை, உளவியல் நடைமுறைகள், தொடர்புகள் உள்ளிட்டவைகளிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
இந்த செயல்களினால், போலீசின் மாண்பு குறைவதாக கருதுகிறீர்களா?
காவல்துறை பணி என்பது மிகவும் சவாலான ஒன்று. சாத்தான்குளம் சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் கணித்துவிட முடியாது.போலீசார் இவ்வாறு மிருகத்தனமாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது தான், அதற்காக, இதை எல்லா போலீசாருடனும் தொடர்புபடுத்தக்கூடாது. சில படங்கள் போலீசை பாராட்டி இருக்கின்றன. பல படங்களில், போலீசாரையே வில்லனாக காட்டி இருக்கின்றனர். போலீசார் தங்களின் நிலையறிந்து செயல்பட வேண்டும். எது சரி எது தவறு என்பதை ஒரு நடவடிக்கைக்கு முன்னதாக அவர்கள் ஆராய்ந்தால், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்கப்படும். போலீசார் நன்முறையில் செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil