தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தூய இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக லாவண்யா தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் விடுதியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், கட்டாய மதமாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டு உயிர் விட்ட லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கே அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நடிகர் செந்தில் மற்றும் கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது, ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு எந்தவித பாரபட்சமுமின்றி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும்’, ‘தவறும் பட்சத்தில் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்’ என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கொரோனா பரவல் காரணமாக பாஜகவினரின் உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையில், பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடதக்கது.
சமூக வலைதளத்திலும் #JusticeForLavanya என்ற ஹேஷ்டேக்கில் பாஜகவினர் ட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil