இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை நிலவும் நிலையில், 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழ்நிலை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்களை சந்தித்து வருகிறார்.
மேலும், தமிழக அரசு இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அளிக்க மத்திய அரசு வெளியுறவு அமைச்சகம் மூலம் உதவ வேண்டும் என்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவெற்றியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில், தமிழக அரசு மத்திய அரசு மூலமாகவே நிவாரணப் பொருட்களை அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு உதவலாம். தேவைப்பட்டால், தமிழக அரசின் இணைச் செயலாளரை அனுப்பலாம் என்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை சந்தித்ததாகவும் அவர்களுக்கு உணவு உடை உள்ளிட்ட பொருட்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று யாழ்ப்பாண சிறையில் நான் இன்று சந்தித்தேன். தமிழ்நாடு பாஜக சார்பாக அவர்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்டுகளை வழங்கினோம். நமது இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விரைவில் நமது தமிழக மண்ணிற்கு வந்து அடைவார்கள்!” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"