கோவையில் கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து அக்டோபர் 31ம் தேதி கோவை மாநகர பகுதியில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முழு அடைப்புக்கு அழைக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கார் வெடிப்பு வழக்கில் தமிழக அரசை கண்டித்து அக்டோபர் 31ம் தேதி கோவை மாநகர பகுதியில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கோவையில் பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம் என்றும், இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் எதிர் மனுதாரரான தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தரப்பில், முழு அடைப்புக்கு மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பை கட்சி தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பா.ஜ.க முழு அடைப்பு நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவையில் திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடந்தால் காவல்துறை சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தியதோடு, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"