/indian-express-tamil/media/media_files/2025/04/19/SjE9IIGHBlJN49mBFC14.jpg)
தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கையை, தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கள் குடும்பத்தினர் பயனடைவதற்காக தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கையை, தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, அண்ணாமலை தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு அரசு வெளியிட்ட விண்வெளி தொழில் கொள்கை, தமிழ்நாடு முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியபோதில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், தொடங்கப்பட்ட வானம் ஸ்பேஸ் எல்.எல்.பி. நிறுவனத்தின் பங்குதாரராக முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் இருக்கிறார். இந்த கொள்கையின் மூலம், அந்த ஸ்பேஸ் நிறுவனம், குறைந்தபட்சம் 20 சதவீதம் மூலதன மானியத்தை பெறும்.
எனவே, இது தொழில் கொள்கை அல்ல. அவர்களின் குடும்பத்தின் கொள்கை. தமிழகம் முதலீடுகளை பெற திணறி வருகிறது. மேலும், 2025-ம் நிதியாண்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் போராடி வருகிறது. இந்த சூழலில், தங்கள் குடும்பத்தினர் பயனடைவதற்காக தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளது அவமானமானது.” என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (18.04.2025) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி கொள்கை 2025-க்கு ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “விண்வெளி கொள்கை 2025-க்கு ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பது முக்கிய இலக்கு ஆகும். இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும். குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு இது வரப்பிரசாதம்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.