இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று, ’என் மண் என் மக்கள்’ நடைபயணம் ஒத்தி வைக்கப்படுகிறது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய நடைபயணம் தற்போது கோவை பகுதியில் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில், நாளை மிலாது நபி பண்டிகையை ஒட்டி, மேட்டுப்பாளையத்தில் நடக்கவிருந்த அண்ணாமலையின் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “நாளை நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடும் மீலாது நபி பண்டிகை. மேட்டுப்பாளையத்தில் நாளை மீலாது நபி ஊர்வலம் மற்றும் நமது நடைபயணத்தால் ஏற்படும் போக்குவரத்து இடர்பாடுகளை கருத்தில் கொண்டு நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் நாளை நடைபெறவிருந்த நமது என் மண் என் மக்கள் நடைபயணம் அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
நமது கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பை நல்கிய கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க சகோதர சகோதரிகளுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையும் மேட்டுப்பாளைய மக்களையும் 4 ஆம் தேதி நமது நடைபயணத்தின் போது சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“