கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "நானும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி குறித்து தெளிவாக இருக்கிறோம். அ.தி.மு.க என்ற பெயரையே நான் எங்கும் குறிப்பிடவில்லை. விவாதத்திற்காக இதனை பேசுபொருளாக மாற்றுகின்றனர்.
நான் கூறுவதையும், எடப்பாடி பழனிசாமி கூறுவதையும் திரித்து கூறுகின்றனர். பா.ஜ.க குறித்து நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன். அ.தி.மு.க குறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசி இருக்கிறார்.
அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் பா.ஜ.க-வை திட்டுவதையே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. அவர்களுக்கு தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.
கூட்டணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கிறார்கள். பத்திரிகையாளர்களான உங்களுக்கு கள நிலவரம் தெரியும். ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அமர்பவர்களுக்கு என்ன தெரியும்.
ஏ.சி ரூமில் அமர்ந்து கொண்டு விமர்சனம் என்ற பெயரில் எழுதுபவர்களுக்கு, அதை தவிர என்ன தெரியும்?" எனக் கூறினார்.