தேர்தல் ஆணையத்தை சந்திப்பதற்காக பா.ஜ.க சார்பாக குழு ஒன்றை அனுப்பவுள்ளதாக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவிற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்திருந்தார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "சென்ற முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலை நடத்தியது போன்ற இல்லாமல், இந்த முறை நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம். சென்ற முறை தேர்தல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளியது போன்று இருந்தது. பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
டெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட இன்றைய தினமே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தலைவர்களுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தும். குதிரைக்கு கடிவாளமிட்டு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை போன்று, தேர்தல் ஆணையம் தங்கள் பணியை செய்ய வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வாக்குச் சதவீதம் 40 அல்லது 50 சதவீதத்தை தாண்டுமா என எனக்கு சந்தேகம் இருக்கிறது. மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிவிட்டு எங்கள் முடிவை அறிவிக்கிறோம்.
பா.ஜ.க சார்பாக ஒரு குழுவை தேர்தல் ஆணையத்தை சந்திக்க அனுப்பவுள்ளோம். சென்ற முறை தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. இந்த முறை சிறப்பு அதிகாரிகளை வெளியே இருந்து அனுப்ப வேண்டும் எனக் கேட்க போகிறோம். சென்ற முறை பிரச்சனை ஏற்பட்ட போது, பாதியில் தான் வெளியே இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
தி.மு.க-வின் பண பலம் மற்றும் படை பலத்தை இந்த முறை தேர்தல் ஆணையம் அடக்க வேண்டும். நியாயமாக, நடுநிலையோடு தேர்தல் ஆணையம் செல்பட வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.