சமூக வலைதளங்களில் தன்னை குறித்து அவதூறு தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஓபிஎஸ் அணியில் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்து வருகிறேன். எனக்கு மிரட்டல் விடுகிறார்கள். சமூக வலைதளத்தில் என்னைக் குறித்தும், ஓபிஎஸ் குறித்தும் அவதூறாக எழுதுகிறார்கள். தற்போது நான் இறந்து விட்டதாக செய்திகளை போட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினோம். தமிழ் மகன் உசேன் ஒரு சார்பாக நடந்து கொண்டார். அதனால் வேட்பாளரை திரும்ப பெற்றோம். இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு தேவையில்லாத வேலையை செய்து வருகிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டே பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதம் தோல்வியை தழுவினார். சின்னத்தை நாசம் பண்ணி விட்டார்கள். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னென்ன ஊழல் நடந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஈரோடு தேர்தல் களத்திற்கு வரும்.
ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்குவாரா என்று பார்க்கலாம். ஈரோட்டில் டெபாசிட் வாங்கவில்லை என்றால், அதிமுக தலைமை அலுவலக சாவி உட்பட அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளாத இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை அண்ணாமலை எந்த அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லை.
பாஜக மீது மரியாதை வைத்திருக்கிறோம், அதற்காக அண்ணாமலை சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது. அண்ணாமலையை கர்நாடகாவிலிருந்து பார்த்து வருகிறேன். அவரை விட எனக்கு அனுபவம் உண்டு என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“